search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் தொட்டி"

    • குடிநீர் தொட்டியில் இருந்த மாட்டு சாணத்தை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
    • மாட்டுசாணம் தானா என உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்களிடம் உறுதியளித்து விசாரித்து வருகின்றனர்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே மீண்டும் அப்படியொரு சம்பவம் அதே புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கம் விடுதி ஊராட்சியில் குருவண்டான் தெருவில் மேல் நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது.

    இங்கிருந்து ஆதிதிராவிடர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் தெருவில் வசிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு திடீரென வயிறு வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இப்படி அடுத்தடுத்து பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தண்ணீர் தொட்டியில் ஏதாவது பிரச்சனை இருக்குமோ எனக் கருதிய அப்பகுதி இளைஞர்கள், தண்ணீர் தொட்டிக்கு மேலே ஏறிப் பார்த்துள்ளனர்.

    அப்போது தொட்டிக்குள் மாட்டுசாணம் இருந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள், குடிநீர் தொட்டியில் இருந்த மாட்டு சாணத்தை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மாட்டுசாணம் தானா என உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்களிடம் உறுதியளித்து விசாரித்து வருகின்றனர்.

    தொடர்ந்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து குடிநீர் விநியோகம் செய்ய ஆணையர் உத்தரவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாந்தி கார்த்திகேயன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராகவியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து மீண்டும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • நாயை அடித்துக்கொன்று குடிநீர் தொட்டியில் வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஆட்டையான்வட்டம் பகுதியில் 5 கிராமங்களுக்கு அனுப்பும் வகையில் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கும் வகையில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி 16.5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த குடிநீர் தொட்டிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் காவிரி நீர் ஏற்றப்பட்டு இந்த தொட்டியில் இருந்து அருகில் உள்ள அங்கன்வாடி மையம், அரசு நடுநிலைப்பள்ளி, கொடியன் வளவு, ஆட்டையன்வளவு, கந்தாயி வட்டம், ஆரான்வட்டம், ஆப்பவட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. டேங்க் ஆபரேட்டராக அம்மாசி என்பவர் பணியாற்றி வருகின்றார்.

    இந்த நிலையில் நேற்று தண்ணீர் தொட்டிக்குள் நாய் ஒன்று செத்து மிதந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தாரமங்கலம் போலீசாருக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி பணியாளர்கள் குடிநீர் தொட்டியில் செத்து மிகுந்த நாயை வெளியே எடுத்து போட்டனர். அதன் பிறகு குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து மீண்டும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



    இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடிநீர்தேக்க தொட்டியில் மர்மநபர்கள் அங்கு சுற்றி திரிந்த தெரு நாயை அடித்துக்கொன்று போட்டுள்ளது தெரியவந்தது.

    எனவே நாயை அடித்துக்கொன்று குடிநீர் தொட்டியில் வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மர்மநபர்களை உடனடியாக போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் எதிர்காலத்தில் வேறு எங்கு வேண்டுமானாலும் இதுபோல் மீண்டும், மீண்டும் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்த சம்பவம் தாரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாடியை ஒட்டி அமைந்துள்ள குடிநீர்த் தொட்டியின் மீது ஏறி எந்த பிடிமானமும் இல்லாமல் சில மாணவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.
    • அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அவை சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கொரட்டூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியை அப்பள்ளியில் பயிலும் நான்காம் வகுப்பு மாணவர்கள் சிலர் மிகவும் ஆபத்தான சூழலில் தூய்மைப்படுத்தும் காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. மாடியை ஒட்டி அமைந்துள்ள குடிநீர்த் தொட்டியின் மீது ஏறி எந்த பிடிமானமும் இல்லாமல் சில மாணவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மேல் மின்சாரக் கம்பி செல்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்ற சூழலில் மாணவர்களை குடிநீர்த் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியில் பள்ளி நிர்வாகம் ஈடுபடுத்தியது கண்டிக்கத்தக்கது. அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அவை சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளின் பராமரிப்புக்காக அரசு கூடுதல் தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மொட்டை மாடியில் உள்ள பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
    • சாலையில் சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார்.

    கொரட்டூர்:

    சென்னை கொரட்டூர் சாவடி தெருவில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. ஒரு வார விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.

    இந்தநிலையில் பள்ளியின் மொட்டை மாடியில் உள்ள பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். ஆபத்தை உணராமல் குடிநீர் தொட்டி மீது ஏறி நின்றபடி குடிநீர் தொட்டியில் இருந்த அசுத்த நீரை வாளி மூலம் வெளியேற்றி வந்தனர். இதை சாலையில் சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார்.

    இதுபற்றி பள்ளி மாணவர்களிடம் அவர் கேட்டபோது, தலைமை ஆசிரியர்தான் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய சொன்னதாக மாணவர்கள் கூறும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

    • பொதுமக்களில் ஒரு சிலர் ஊரின் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீரை பரிசோதனை செய்தனர்.
    • கடந்த இரு நாட்களாக அப்பகுதியில் உள்ள யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் ஆனைகுளம் ஊராட்சி துலுக்கர் பட்டியில் இன்று காலை குடிநீரில் அதிகமான மருந்து வாசனை வீசியதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்தது.

    இதையடுத்து பொதுமக்களில் ஒரு சிலர் ஊரின் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீரை பரிசோதனை செய்தனர். அப்போது அதிகமான மருந்து வாசனை வீசி உள்ளது.

    இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் தலைமையிலான சுகாதாரத்துறையினர் விரைந்து சென்ற குடிநீரை பரிசோதனை செய்தனர்.

    மேலும் கடந்த இரு நாட்களாக அப்பகுதியில் உள்ள யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.

    எனினும் அதில் பூச்சி மருந்தை விஷமிகள் யாரேனும் கலந்தனரா? அல்லது கிருமி நாசினி பவுடர் அதிகம் கலந்ததால் வாசனை உள்ளதா? என்ற நோக்கத்தில் சுகாதாரத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

    • சீரமைக்க வலியுறுத்தல்
    • பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த மகமதுபுரம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி பழுதடைந்து பயன்படாத வகையில் உள்ளது.

    மேலும் அப்பகுதியில் 3-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் இதேபோல் பழு தடைந்து இருப்பதா கவும், இதனால் அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை அடிக்கடி ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

    மேலும் குடிநீர் செல்லும் குழாய்கள் ஆங்காங்கே பழுதடைந்தும், உடைந்தும் குடிநீர் வீனாக வெளியேறுகிறது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

    எனவே அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க பழுதடைந்து கிடக்கும் குடிநீர் தொட்டி யை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதே வேளையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொது மக்களிடயே அச்சத்தையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாக திட்டமிட்டுள்ளது.

    அதன்படி பொன்னமராவதி பாப்பாயி ஆட்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு, கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, கீரனூர், விராலிமலை மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கும் முகாம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    புதுக்கோட்டையில் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது, திறந்த வெளியில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள், டயர்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். டெங்கு தடுப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    • பைப் வழியாக 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
    • குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரி கடந்த 2 ஆண்டுகளாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியம் வெள்ளி வாயல் சாவடி ஊராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு எம்.ஜி.ஆர். நகரில் குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி உள்ளது. 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி இங்கிருந்து எம்.ஜி.ஆர் நகர், சில்வர் நகர், சேக்கன் காலனி, கிருஷ்ணா நகர், உள்ளிட்ட பகுதிகளுக்கு பைப் வழியாக 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    கடந்த 2004-ம் ஆண்டுகட்டப்பட்ட குடிநீர் தொட்டி மிகவும் சேதம் அடைந்து உள்ளது. எனினும் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. குடிநீர் தொட்டியின் நான்கு தூண்களின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ள கம்பிகள் வெளியே எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது.

    மேலும் தொட்டியில் இருந்து தண்ணீர் கசிந்து பச்சைபாசிப் படிந்து உள்ளது. இந்த குடிநீர் தொட்டி எப்போது வேண்டுமானாலும் உயிர் பலி வாங்க இடிந்து விழும் நிலையில் காட்சி அளிப்பதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் பம்பு ஆப்பரேட்டர் குடிநீர் தொட்டியில் ஏறி சுத்தம் செய்ய அச்சப்படுவதால் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரி கடந்த 2 ஆண்டுகளாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மருதநத்தம் கிராமத்தில் குடிநீர் தொட்டியை சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • சமுதாயக்கூடம் கட்டுமான பணியையும், மருதநத்தம் கிராமத்தில் தரிசுநில மேம்பாட்டு திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள மருதநத்தம் கிராமத்தில் ரூ.18.20 லட்சம் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து நாட்டார்மங்கலம் அம்மன் கோவில்பட்டி கிராமத்தில் சமுதாயக்கூடம் கட்டுமான பணியையும், மருதநத்தம் கிராமத்தில் தரிசுநில மேம்பாட்டு திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.

    இதில் விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், யூனியன் கவுன்சிலர் அமுதா செல்வராஜ், கிராம பஞ்சாயத்து தலைவர் காசிராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கற்பகவல்லி, சீனிவாசன், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆவுடையம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீனிவாசன் எம்.எல்.ஏ., கிராம பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

    • தொட்டி கடந்த சில மாதங்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் குப்பைகள் நிறைந்து அசுத்தமாக காணப்படுகிறது.
    • அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள பனைக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவியர் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் பள்ளி மாணவர்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டியில் துர்நாற்றம் வீசியதாக மாணவர்கள் பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.

    இதனை அடுத்து பள்ளி ஆசிரியர் கணேசன் தொட்டியை ஆய்வு செய்தபோது தொட்டியில் துர்நாற்றம் வீசியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பாப்பாரப்பட்டி போலீசில் கணேசன் புகார் அளித்ததை அடுத்து பென்னாகரம் டி.எஸ்.பி. மகாலட்சுமி பாப்பாரப்பட்டி போலீசார் மற்றும் பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் துளசிராமன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொட்டியை சுத்தம் செய்து தொட்டிலிருந்த தண்ணீரை ஆய்வுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    மேலும் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதா என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த தொட்டியில் இருந்து மாதிரிகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்த குடிநீர் தொட்டி மாணவர்கள் தாகம் தீர்ப்பதற்காக வைக்கப்பட்டுள்ள தொட்டி அல்ல என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மாணவர்கள் கழிப்பறையில் பயன்படுத்துவதற்காக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியாகும்.

    இந்த தொட்டி கடந்த சில மாதங்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் குப்பைகள் நிறைந்து அசுத்தமாக காணப்படுகிறது. இருந்தபோதிலும் துர்நாற்றம் வீசுவதால் தொட்டியில் இருந்து மாதிரி நீர் சேகரிகப்பட்டு பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ஆய்வறிக்கை வந்த பின்னரே மனித கழிவு தண்ணீரில் கலந்து உள்ளதா என தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பள்ளியில் குடிநீர் தொட்டி வேறு இடத்தில் இருக்கிறது. மனித கழிவு கலக்கப்பட்டதாக கூறப்படும் தொட்டி மாணவர்களின் கழிப்பிடத்திற்கு மட்டுமே பயன்படுத்தக் கூடியது. மேலும் இத்தொட்டியில் மனித கழிவு கலந்திருப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை. அதிகாரிகள் தொட்டிலிருந்த தண்ணீரை ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

    ஆய்வறிக்கையில் மனித கழிவு கலக்கப்பட்டது என்று தெரிய வந்தால் யாராக இருந்தாலும் காவல்துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இரவு நேரங்களில் மது பிரியர்களின் தொல்லை அதிகமாக உள்ளது, எவ்வாறு நடந்தது என்று தெரியவில்லை என்றனர்.

    அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • நாளும் ஒரு புதுத்தகவல்கள் வந்தபோதிலும் அதில் ஈடுபட்ட கயவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை
    • வழக்குப்பதிவு செய்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

    விருதுநகர்:

    அறிவியல், விஞ்ஞானம், விண்வெளி, நாகரீக வளர்ச்சி என்று நாடு முன்னேற்ற பாதையில் பயணித்தாலும், அவற்றையெல்லாம் படுபாதாளத்தில் தள்ளும் வகையிலான ஈனச்செயல்கள் ஆங்காங்கே அரங்கேறி வருவதுதான் வேதனைக்குரிய செயல்.

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் அருகேயுள்ள இறையூர் கிராமத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு மனித கழிவுகளை கலந்து முன்னேற்றம் அடையாத சமுதாயம் என்பது முத்திரை குத்தப்பட்டது.

    உள்ளூர் போலீசார், சி.பி.சி.ஐ.டி., அறிவியல் பூர்வமான விசாரணை என்று நாளும் ஒரு புதுத்தகவல்கள் வந்தபோதிலும் அதில் ஈடுபட்ட கயவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. மீண்டும் ஒருமுறை அதனை நினைத்து பார்க்கக்கூடாது என்றிருந்த நிலையில் அதே சாயலில் விருதுநகர் அருகே மற்றொரு செயல் நடந்துள்ளது.

    விருதுநகர் அருகேயுள்ள சின்னமூப்பம் பட்டி கிராமத்தில் 200 பேர் கல்வி பயிலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. முழுக்க, முழுக்க அந்த ஊரைச்சேர்ந்த மாணவ, மாணவிகளே இங்கு படிக்கிறார்கள்.

    முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தின்கீழ் இந்த பள்ளி மாணவ, மாணவிகள் பெருமளவில் பயனடைந்து வருகிறார்கள். அவர்களின் குடிநீர் தேவைக்காக ஏற்கனவே இருந்த வசதியுடன் கூடுதலாக புதிய குடிநீர் தொட்டி ஒன்று தரைதளத்தில் அமைக்கப்பட்டது.

    எந்தவித பாகுபாடும் இன்றி இதுவரை வயிறாற உணவுடன், தரமாமன கல்வியும் போதிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென பூதாகரமாக புகுந்த கயவர்கள் சிலர் பிரச்சினையை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.

    வழக்கமான வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2-ந்தேதி பள்ளிக்கு வந்த மாணவர்கள் அந்த தொட்டியில் இருந்து குடித்த நீரில் துர்நாற்றம் வீசியது. அதனை திறந்து பார்த்தபோது சாணம் கலந்திருப்பது தெரியவந்தது. சுத்தம் செய்பவர்கள் பெரிதுபடுத்தாமல் கழுவி தண்ணீர் ஏற்றினர். 3-ந்தேதியும் இதே செயல் நடந்தது.

    கிருஷ்ணஜெயந்தி விடுமுறைக்கு மறுநாளான நேற்று பள்ளிக்கு வந்த குழந்தைகள் தண்ணீரை பருகியபோது மீண்டும் அதில் சாணம் அதிக அளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிக்க வந்த மகளிர் சுய உதவிக்குழுவினரும் இதனை உறுதி செய்தனர்.

    இதுபற்றி மாணவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா, விருதுநகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

    அப்போது அங்கு திரண்டு ஊர் பொதுமக்கள் கூறுகையில், இந்த பள்ளியில் உள்ளூர் மாணவர்களே படித்து வருகிறார்கள். எனவே அவர்கள் இதுபோன்ற அசுத்தமான செயலை செய்திருக்கமாட்டார்கள். பக்கத்து ஊர்களை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இங்கு விளையாட வருவார்கள் என்று தெரிவித்தனர். அவ்வாறு வரும் மாணவர்கள் யார், அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் கூறுகையில், விடுமுறை நாளில் பள்ளிக்கு விளையாட வந்தவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் உரிய விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

    சாதிய வன்கொடுமையை தடுக்க தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இதுபோன்ற செயல்கள் மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் அமைந்துள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் சாணம் கலந்திருப்பது தெரியவந்தது.
    • இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சமூக விரோதிகளை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக பள்ளியில் உள்ள சமையல் கூடத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் காலையில் உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் பணிக்கு வந்த சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உணவு தயாரிப்பதற்காக குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தனர்.

    அப்போது தொட்டியில் உள்ள குடிநீரில் ஒருவித துர்நாற்றம் ஏற்பட்டது. சமூக விரோதிகள் குடிநீரில் சாணம் கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி தொட்டி சுத்தம் செய்யப்பட்டது. இதனால் காலை சிற்றுண்டி செய்யும் பணி தாமதமானது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அரசு விடுமுறை என்பதால் பள்ளி பூட்டப்பட்டிருந்தது. இருப்பினும் கிராம மக்கள் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தனர். அப்போது மீண்டும் தண்ணீரில் சாணம் கலந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசா ருக்கும், பள்ளி உயரதிகாரி களுக்கும் தகவல் தெரிவிக் கப்பட்டது. காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மர்ம நபர்கள் குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சமூக விரோதிகளை தேடி வருகின்றனர்.

    ×